படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்றால் என்ன?

படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது உங்கள் பிள்ளையால் கட்டுப்படுத்த
முடியாமல் இரவில் சிறுநீர் கழித்தல் ஆகும். பிள்ளை விழித்திருக்கும்போதும்
கூட சிறுநீர்ப்பை நிரம்பியிருப்பதை அறிந்துகொள்வதில் பிரச்சினையிருக்கலாம்.
மற்றும் பகல் நேரத்தில் கூட அறியாது சிறுநீர் கழிக்கலாம். படுக்கையில்
சிறுநீர் கழித்தல் இரவு கால இனூறெஸிஸ் என்றும் அழைக்கப்படும். பகல் நேர
படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகற்கால இனூறெஸிஸ் என்று அழைக்கப்படும். இவை
இரண்டும் வித்தியாசமான இரண்டு நிலைமைகள்.
படுக்கையில் சிறுநீர் கழித்தல் இளம் பிள்ளைகளில் மிகவும் சாதாரணம்.
படுக்கையில் சிறுநீர் கழித்தல் ஐந்து வயதுப் பிள்ளைகளில் பத்துப் பேரில்
ஒருவருக்குக் காணப்படுகிறது. பின்பு இது ,15 வயதுப் பதின்ம வயதினரில் 100
பேருக்கு 2 ஆகக் குறைவடைகிறது. தன்னிச்சையாக மற்றும் அறியாமலும் இரவில்
படுக்கையில் சிறுநீர் கழிப்பது உங்கள் பிள்ளையின் வள்ர்ச்சியில் ஒரு சாதாரண
நிலை. டாய்லெட் பயிற்சி கொடுக்கத் தவறிவிட்டீர்கள் என இதை எடுத்துக்கொள்ள
வேண்டாம். ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமான காலப்பகுதியில்
மூதிர்ச்சியடைந்து சிறுநீர்பையைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு சில பிள்ளைகள்
மாத்திரமே 3 வயதுக்கு முன்பாக இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல்
இருப்பார்கள். பெரும்பாலான பிள்ளைகள் 3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையில்,
சிலவேளைகளில், இரவில் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்கத்
தொடங்குவார்கள். உங்கள் பிள்ளை இந்த மைல்கல்லை எட்டும்வரை, உங்கள்
பொறுமையும் புரிந்துகொள்ளுதலும் உங்கள் பிள்ளைக்கு உதவியாகவும்
உற்சாகப்படுத்துவதாகவும் இருக்கும்.

காரணங்கள்

பெரும்பாலான நிலைமைகளில், உங்கள் பிள்ளை ஆழ்ந்து நித்திரை செய்வதனாலும்,
சிறுநீர்ப்பை நிரம்பியவுடன் விழித்தெழாதிருப்பதினாலும் படுக்கையில்
சிறுநீர் கழிக்கப்படுகிறது.
பெரும்பாலும், படுக்கையில் சிறுநீர் கழிக்கும் போக்கு பரம்பரையில்
காணப்படுகிறது. நீங்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பவராக இருந்திருந்தால்,
உங்கள் பிள்ளையும் அதையே செய்ய நேரிடலாம்.
மிகவும் அரிதான நிலைமைகளில், டைப் 1 நீரிழிவு நோய் அல்லது சிறுநீர்ப்
பாதையில் பரம்பரைக் குறைபாடு படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கான
காரணமாயிருக்கலாம். ஆயினும், இந்த நிலைமைகள் இரவில் மாத்திரம் படுக்கையில்
சிறுநீர் கழிக்கக் காரணமாயிருக்காது; பகல் நேர அறிகுறிகளுக்கும்
காரணமாகும். பகல் நேர அறிகுறிகள் இல்லாதிருக்கும்போது, உங்கள் பிள்ளை முழு
ஆரோக்கியமுள்ளவனாயிருக்கிறான் என்பதில் நீங்கள் முழு நிச்சயமாயிருக்கலாம்.
கவலைகள் அல்லது புதிய வீடு அல்லது சகோதரர்களுடன் செயல் தொடர்பு போன்ற
உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பழக்கங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,
படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்குக் காரணமாகாது. படுக்கையில் சிறுநீர்
கழித்தல், வெறுமனே ஒருதுணி துவைக்கும் பிரச்சினையாக இருக்கும்போது, அதைப்
பிள்ளையின் “பிரச்சினை” என்பதாக நடத்திக்கொண்டால், பிள்ளைக்கு கவலைகளும்
சுய-மதிப்பில் பாதிப்பும் உருவாகலாம்.

மருத்துவரை நீங்கள் எப்போது பார்க்கவேண்டும்?

படுக்கையில் சிறுநீர் கழித்தல் பகல் வேளையில் சம்பவித்தால் மற்றும் உங்கள்
பிள்ளை 6 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவனாயிருந்தால், உங்கள்
பிள்ளையின் மருத்துவருடன் ஒரு சந்திப்புத் திட்டத்தை வைக்கவேண்டியது
அவசியம்.
6 மாதங்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருந்துவிட்டு பின்னர் திடீரென
படுக்கையில் சிறுநீர் கழித்தால், உங்கள் பிள்ளை ஒரு மருத்துவரைச்
சந்திக்கவேண்டும்.

சிகிச்சைகள் மற்றும் மருந்துகள்

பகல் நேரப் படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கு, உங்கள் பிள்ளையின்
மருத்துவர் ஒரு உடல்ரீதியான காரணத்தைக் கண்டுபிடித்தால், சிறுநீர்ப் பாதை
தொற்றுநோய் போன்றவற்றிற்குச் சிகிச்சையளிப்பதற்காக, அன்டிபையோடிக்ஸ்
மருந்தை எழுதிக் கொடுப்பார்.
இரவு நேரப் படுக்கையில் சிறுநீர் கழித்தலுக்கு, டெஸ்மொப்ரெஸ்ஸின் (DDAVO)
என்றழைக்கப்படும் ஹோர்மோனை உங்கள் பிள்ளையின் மருத்துவர்
எழுதிக்கொடுக்கலாம். ஆனால் இது பிள்ளை வெளி இடத்தில் இரவைக் கழிக்கும்போது
மட்டுமே கொடுக்கப்படும்.

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் உங்கள் பிள்ளைக்கு எப்படி உதவி செய்யலாம்

உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளும் புரிந்துகொள்ளுதலும் உங்கள்
பிள்ளைக்குத் தேவைப்படலாம். உற்சாகப் படுத்துதலும் நேர்மறையான
வலுவூட்டுதலும் (படுக்கையில் சிறுநீர் கழிக்காத இரவுகளைப் புகழுதல்)
இனிமேலும் சிபாரிசு செய்யப்படவில்லை. ஏனெனில், நாம் படுக்கையில் சிறுநீர்
கழிக்காத இரவுகளைப் புகழும்போது, படுக்கையில் சிறுநீர் கழித்த இரவுகளில்
வெட்கப்பட எதுவுமேயில்லை என அவர்களை நம்பவைப்பது கடினம். படுக்கைக்குப்
போவதற்கு முன்பாக சிறுநீர் கழிக்கும்படி மென்மையாக நினைப்பூட்டுவது உதவியாக
இருக்கலாம். ஆனால் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு பிள்ளையை விழித்தெழுப்புவது
(லிஃப்டிங்) மதிப்புள்ளதாயிருப்பதைவிட கஷ்டமானதாயிருக்கும். பெரும்பாலான
பிள்ளைகள் சிகிச்சையளிக்கப்படாமலே படுக்கையில் சிறுநீர் கழித்தலை
நிறுத்திவிடுகிறார்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உங்கள் பிள்ளைக்கு நம்பிக்கையளித்தல்
உங்கள் பிள்ளையின் படுக்கை விரிப்புகளை தொடர்ந்து கழுவிக்கொண்டேயிருந்தால்,
இலகுவில் வெறுப்படைந்துபோகலாம். உங்கள் பிள்ளையைத் தண்டிப்பது அல்லது
மதிப்புக் குறைவாக்குவதற்குப் பதிலாக, அது அவனது தவறல்ல, மற்றும்
காலப்போக்கில் அது சரியாகிவிடும் என அவனுக்கு நம்பிக்கையளிக்கவும்.
மற்றக் குடும்ப அங்கத்தினரும் இந்த நிலைமையைப் புரிந்து நடக்கவேண்டும்.
மற்றக் குடும்ப அங்கத்தினர் உங்கள் பிள்ளையைப் பரிகாசம்பண்ண
அனுமதிக்கவேண்டாம்.

உங்கள் பிள்ளைக்கு உதவக்கூடிய வேறு பொது- அறிவுக் குறிப்புகள் பின்வருவனவற்றை உட்படுத்தும்:

இரவில் எழுந்து கழிவறையை உபயோகிக்கும்படி உங்கள் பிள்ளைக்கு நினைப்பூட்டவும்
கழிவறைக்குப் போகும் பாதை சென்றடையக்கூடியதாக இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்
படுக்கைக்குப் போவதற்கு முன்பாக கழிவறையை உபயோகிக்கும்படி உங்கள் பிள்ளையை
உற்சாகப்படுத்தவும். வேறொரு தெரிவு, படுக்கை நேர வழக்கத்தின் தொடக்கத்தில்
கழிவறையை உபயோகிக்கும்படி உங்கள் பிள்ளையைக் கேட்கவும் மற்றும்
படுக்கைக்குப் போக சற்று முன்னர் திரும்பவும் கழிவறையை உபயோகிக்கும்படி
கேட்கவும்.
படுக்கையின்மேல் ஒரு பிளாஸ்டிக் மேலுறையை உபயோகிக்கவும்.
காலையில் சுத்தம் செய்யும் வழக்கத்தில், மதிப்புக் குறைவு படுத்தாமல்,
தண்டனை கொடுக்காத வகையில், உங்கள் பிள்ளையையும் சேர்த்துக் கொள்ளவும்.

முக்கிய குறிப்புகள்

படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பது இளம் பிள்ளைகளுக்குச் சாதாரணமானது.
ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமான கால கட்டத்தில் சிறுநீர்ப்பைக் கட்டுப்படுத்தலை விருத்திசெய்கிறார்கள்.
உங்கள் பிள்ளைக்கு 6 வயதான பின்னரும் இரவும் பகலும் சிறுநீர்ப் பையைக் கட்டுப்படுவதில் கஷ்டம் இருந்தால் ஒரு மருத்துவரிடம் பேசவும்.
கழிவறையை உபயோகிக்கும் வழக்கம் குறித்து நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையும் மென்மையான நினைப்பூட்டுதலையும் சிகிச்சை உள்ளடக்குகிறது.
அவமானப்படுத்துதலும் தண்டனையும் நல்ல சிறுநீர்ப்பை கட்டுப்பாட்டை வளர்க்க பிள்ளைக்கு உதவுவதில்லை.