குழந்தைகளின் திறமையை எப்படி கண்டுபிடிப்பது?

“என் குழந்தை படிப்பில் சுட்டி, விளையாட்டிலும்
படுசுட்டி.” என்று பெற்றோர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி
பெருமைப்படுவது உண்டு. தன் குழந்தையிடம் என்ன திறமையிருக்கிறது என்று
தெரியாமலே புலம்பி, குழம்புகிறவர்களும் உண்டு.
திறமை எல்லோரிடமும் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட துறையில்
இந்த திறமை அதிகமாக இருக்கும். அது எந்த துறை என்பதை உணர்ந்து தேடிக்
கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின்பு அதை வளர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைப்
பின்பற்றுவது என்று யோசிக்க வேண்டும். அதற்கு நாம் அந்த துறையைப் பற்றிய
தகவல்களை விரல்நுனியில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள்
குழந்தைகள் விரும்பிய துறையில் ஜொலிக்க முடியும்.

குழந்தைகளிடம் இருக்கும் திறமையை எப்படி கண்டு பிடிப்பது?

சில குழந்தைகள் கையில் பேனா, குச்சி போன்ற ஏதாவது ஒரு எழுதுபொருள்
கிடைத்துவிட்டால் சிலேட்டிலோ அல்லது தாளிலோ கிறுக்கிக் கொண்டே
இருப்பார்கள். இந்த குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது
என்பதை அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொண்டு அந்த துறையில் அவர்களை
ஊக்கப்படுத்தலாம். கிறுக்கிக் கிறுக்கி வரையும் போது ஓவியத்திறமை
வெளிப்படும். இதைத்தான் ‘சித்திரமும் கைப்பழக்கம்’ என்று கூறுவர்.
அதேபோல் சிலருக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் இருக்கும். அவர்களுக்கு
பிடித்த பாடல் எங்கேயாவது கேட்டுவிட்டால், அதே ராகத்துடனே இவர்களும்
சேர்ந்து பாட ஆரம்பித்து விடுவர்.
மிமிக்ரி, நடனம், நடிப்பு, இசை, தையல், விளையாட்டு, பேச்சுக்கலை, விண்வெளி
ஆராய்ச்சி, இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி,
சமூக சேவை என்று அவர்களுக்கு எந்தெந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை
அவர்களது செயல்பாடுகளை வைத்தே கண்டுபிடித்து விடலாம்.

* உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த துறையில் உள்ளது என்பது பற்றி நீங்களே
உணர்ந்தாலும்கூட, குழந்தைக்கு அதில் மிகுந்த ஆர்வம் உள்ளதா என்று
அவர்களிடமே கேட்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

* எந்தவிதக் கட்டாயத்தின் பேரிலும், மற்ற குழந்தைகளுடன் உங்கள்
குழந்தைகளின் திறமையை ஒப்பிட்டு அவர்கள் முன் குறை சொல்லி விடாதீர்கள்.

* பக்கத்து வீட்டு குழந்தைகள் பாடுவதில் கில்லாடியாக இருக்கலாம். உங்கள்
குழந்தைக்கு பாடுவது சிரமமான காரியமாக இருக்கும். அதற்காக அந்த குழந்தையைப்
போல் உங்கள் குழந்தையையும் பாட்டு கிளாசில் சேர்த்து அவர்களை
சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைக்கு எதில் ஆர்வம் உள்ளது என்பதைத்
தெரிந்து கொண்டு அவர்கள் விரும்பும் துறையில் சேர்த்து விடுங்கள்.

* உங்கள் குழந்தை திறமையை வெளிப்படுத்தி பரிசு வாங்கி வரும்போது அவர்களை
பாராட்டத் தயங்காதீர்கள். அதேபோல் தோல்வியடைந்தாலும் தட்டிக்கொடுத்து
அடுத்த முறை நீதான் வெற்றி பெறுவாய் என்று ஆறுதலான வார்த்தைகளைக் கூறி
உற்சாகப்படுத்துங்கள்.
* ‘வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு’ என்று அவ்வப்போது உங்கள்
குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். ‘தோல்விகள்தான் வெற்றியின்
படிக்கற்கள்’. ‘தோல்வியில் இருந்துதான் வெற்றிக்கான பாடம் கற்க முடியும்’
என்றும் எடுத்துக் கூறி உங்கள் குழந்தையின் மனதை இளமையிலேயே
திடப்படுத்துங்கள்.

* தன்னம்பிக்கையையும், வீரத்தையும் ஊட்டி வளர்க்கும் விதத்தில், ஜான்சி
ராணி லெட்சுமிபாய், வீரசிவாஜி, நெப்போலியன், மாவீரன் அலெக்சாண்டர்
போன்றவர்களின் வீரத்தைச் சுட்டிக்காட்டும் சம்பவங்களை கூறுங்கள்.

* உங்கள் குழந்தைகளிடம் உள்ள திறமை சார்ந்த தகவல்களையும், அந்த துறையில்
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களையும்
அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள்.